என்னை வாழ விடுங்கள்” – ஒரு மனிதனின் உண்மையான சிந்தனை
என் பெயர் கௌதம். நான் MCA முதுகலை பட்டதாரி. நான்கு ஆண்டுகள் ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் கணினி ஆசிரியராக பணியாற்றினேன். ஆனால் எனது உள்ளத்திலிருந்த ஆசை – சினிமா வாழ்க்கையை நம்பி, அந்த வேலையை விட்டு வெளியேறினேன். வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன். கடைசியில் யாரும் வாய்ப்பு தரவில்லை.
நான் யூடியூபில் ‘Gowtham 360’ என்ற சேனல் நடத்தி வருகிறேன். தற்போது 12,000 சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். அதில் நான் என்னால் முடிந்த வகையில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறேன். செலவுகளை சமாளிக்க, சின்ன சின்ன கணினி வேலைகளும், அலுவலக உதவிப் பணிகளும் செய்து வருகிறேன்.
நேற்று ஒரு ஃபர்னிச்சர் ஷோரூமில் ஒருநாள் வேலை செய்ய வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அலுவலகத்துக்கு ஏற்ற சட்டை, பேண்ட், ஷூ எல்லாம் அணிந்து தயாரானேன்.
வீட்டிலிருந்து கிளம்பும் தருணத்தில், என் அம்மா!, வீட்டின் திண்ணையில் அமர்ந்து என்னை திட்டினாள்.
“ஒரு நாளைக்கே இவ்வளவு பில்டப்பா? டெய்லி வேலைக்குப் போனா என்ன பண்ணுவானோ! இந்த பிச்சைக்கார வேலைக்கு கிளம்பிட்டான்!”
அம்மா திட்டும் வார்த்தைகள் என் மனதை கிழித்து விட்டது. காரணம்? நான் என் செலவுகளைப் பார்த்துக் கொள்கிறேன். யாரிடமும் கை நீட்டவில்லை. யூடியூப்பில் எனது கனவை நோக்கி பயணிக்கிறேன் என்பதே என் குற்றமா?
வாழ்க்கையை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்களா?
மனிதன் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும், 36,000 நாட்கள் மட்டுமே. அதில் பாதி தூக்கத்தில், மீதி வேலை, நோய், துன்பம் – ஒட்டுமொத்தமாக, மனிதன் சந்தோஷமாக இருப்பது மிகக் குறைவே. இந்த குறுகிய காலத்தில் ஒருவன் தனது ஆசையை அனுபவிக்க விரும்பினால், அந்த ஆசைக்கே தண்டனை போல திட்டப்படுகிறான்.
என் அம்மா 55 வயதினர். அவரால் எனது ஆர்வத்தை புரிந்துகொண்டு ஊக்கப்படுத்த முடியவில்லை. என்னால் வளரவில்லை என்பதற்கான கோபமா? இல்லையென்றால் சமூகத்தை பார்த்து என்னை ஒப்பிடுகிறார்களா? எனக்கு புரியவில்லை.
பணம் மட்டும் வாழ்க்கையா?
பணம் தேவை தான். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்று முடிவு செய்துவிட முடியாது. பணக்காரர்கள் நேரடியாக உடல் உழைப்பை வைத்து சம்பாதிப்பது இல்லை.
இடைத்தரகர் வேலையில் தான் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் நாங்கள் – அடித்தட்டு மக்கள் – உடலை உழைத்து ஒரு நாள் ₹500-₹1000 சம்பாதிக்கிறோம். இது தான் வாழ்க்கையா?
நான் என்ன தவறு செய்தேன்? வழியில்லாமல் யோசிக்கிறேன். என் நண்பர்கள் பலர் குடிகாரர்கள், வேலை செய்யாதவர்கள். ஆனால் அவர்களிடம் ஏதும் எதிர்ப்பில்லை. ஆனால் நான் முயற்சிப்பதே ஒரு குற்றம் போலக் கருதப்படுகிறது.
வாழும் வரை வாழவிடுங்கள்
மனிதன் பிறந்தது ஒரு சங்கிலியின் தொடர்ச்சி. இன்று நாம் உயிரோடு இருப்பது, பல தலைமுறை மனிதர்கள் தங்களின் வாழ்க்கையை செலவழித்ததற்கேற்ப. அவர்கள் பணம் இல்லாத வாழ்க்கையையும் சந்தோசமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்று பணத்தை மட்டும் வாழ்க்கையாக வைத்திருப்பது தவறு.
நான் கேட்டுக் கொள்கிறேன் – என்னை வாழ விடுங்கள்!
எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. அதற்காக நான் முயற்சி செய்கிறேன். என் வழி வித்தியாசமானது என்பதற்காக என் மீது கோபப்பட வேண்டாம்.
தாயாக இருந்தும் மகனை திட்டி தீர்த்துவிட்டு, பிறரிடம் அவமானப்படுத்துவது ஒரு வழி அல்ல.
உண்மையான வழி – அவனை ஊக்கப்படுத்தி, வாழ்க்கையை அனுபவிக்க விடுவதே.
இது தான் என் மனத்தின் உள்ஒளி. இவ்வுலகில் யாரும் இறந்த பிறகு நினைவில் இருக்க மாட்டார்கள். ஆனால் உயிரோடு இருக்கும்போது ஒருவரை மதிப்பது – அது தான் வாழ்க்கை.
நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக